தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்கலங்களை இணைக்கும் திட்டம் வெற்றி: 4வது நாடாக சாதித்த இந்தியா

2 mins read
fb517418-69d8-41fb-9d9e-61bbfe1a081e
‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றதையடுத்து, இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார். - படம்: ஊடகம்

பெங்களூரு: விண்வெளியில் இரு விண்கலங்களை ‘டாக்கிங்’ செயல்முறையில் இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக வியாழக்கிழமை (ஜனவரி 16) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக ‘டாக்கிங்’ முறையை வெற்றிகரமாக செயல்படுத்திய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

2035ஆம் ஆண்டுக்குள் அனைத்துலக விண்வெளி நிலையத்தைப் போல இந்தியாவுக்கென தனி விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டுள்ளது. மேலும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

அத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த விண்ணில் இரு விண்கலங்களை இணையச் செய்யும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம். இதற்கான முன்னோட்டமாக, பிஎஸ்எல்வி சி-60 உந்துகணை மூலம் ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி என்ற இரு விண்கலங்களை விண்வெளியில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ‘இஸ்ரோ’ பாய்ச்சியது. அவ்விரு விண்கலங்களையும் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

தலா 220 கிலோ எடை கொண்ட ‘சேசர்’, ‘டார்கெட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த ‘ஸ்பேடெக்ஸ்’ விண்கலங்களை முதலில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது.

இந்நிலையில், ‘டாக்கிங்’ செயல்முறையில் ‘ஸ்பேடெக்ஸ்’ விண்கலங்களை இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

“விண்கலங்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. விண்வெளியில் ‘டாக்கிங்’ செய்த 4வது நாடு இந்தியா,” என இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியது.

இந்நிலையில், இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விண்வெளியில் இரு விண்கலங்களை இணையச் செய்த இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களுக்குப் பாராட்டுகள். இந்தச் சாதனை, இந்தியாவின் வருங்கால விண்வெளித் திட்டங்களுக்கு உதவும் ஒரு படிக்கல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளப் பதிவில், “ஸ்பேடெக்சின்கீழ் பாய்ச்சப்பட்ட இரு விண்கலங்களை ‘டாக்கிங்’ மூலம் இணைக்கும் இந்தியாவின் விண்வெளித் திட்டம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. சந்திரயான்-4, இந்தியாவின் திட்டமிடப்பட்ட விண்வெளி நிலையம், ‘ககன்யான்’ போன்ற விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் எதிர்கால முயற்சிகளுக்கு இச்சாதனை உறுதுணையாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்