வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரைச் சேர்க்கச் சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரைச் சேர்க்கச் சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம்

கோப்புப் படம்: தினத்தந்தி

03 Oct 2026 - 5:05 pm

1 mins read

புதுடெல்லி: நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், விடுபட்ட, தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க உடனடியாகச் சிறப்பு முகாம்களை நடத்துமாறு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தீவிரத் திருத்த நடவடிக்கையின்போது கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.

இந்நிலையில், தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்குரிமையை இழந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அதிகாரிகள், பழைய வாக்காளர் பட்டியலையும் தற்போதைய இறுதிப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து, விடுபட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வாரத்திற்கு 20 முதல் 25 வாக்காளர்களைச் சரிபார்த்து, ஒரு மாதத்திற்குள் இந்தப் பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கள ஆய்வின்போது விடுபட்ட தகுதியான வாக்காளர்கள், புதிய இளம் வாக்காளர்களிடம் இருந்து நேரடியாகப் ‘படிவம்-6’ பெறப்படும் என்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுடன் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்