சென்னை: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, டிசம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து கேரளத்திற்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் - கொல்லம் இடையிலான அந்தச் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை பிற்பகலில்தான் வெளியானது. ஆனால், அதற்கான பயணச்சீட்டுகள் வியாழக்கிழமை காலையிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதுபோல், சென்னை தாம்பரம் - கொல்லம், தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டுகள் விற்று முடிந்த பிறகே அவை குறித்த அறிவிப்புகள் வெளியானதாக ‘மாத்ருபூமி’ செய்தி தெரிவிக்கிறது.
இதனையடுத்து, சிறப்பு ரயில்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே பயணச்சீட்டுகள் விற்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.
பயணிகளுக்குத் தெரியும் முன்னரே, பயண முகவைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் விற்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், தாம்பரம் - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட 24 மணி நேரம் கூட இல்லாத நிலையிலேயே அதுகுறித்த அறிவிப்பு வெளியானதாகச் சொல்லப்படுகிறது.
பண்டிகைக் காலங்களில் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகளுக்கு பயணிகள் காத்திருப்பது வழக்கமே. இந்நிலையில், சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியாகாததால் பொதுமக்களுக்கு அவற்றால் பயனில்லை எனக் கூறப்படுகிறது. சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்குவதற்குக் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பேனும் அவை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.