புதுடெல்லி: மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மூன்று மாநிலங்களுக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் சிறப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு கஸ்தூரிரங்கன் தலைமையிலான ஒரு குழுவினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
ஆறு மாநிலங்களில் உள்ள 56,000 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதி சுற்றுச்சூழல் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட இருந்தது.
இதன் மூலம் அக்குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் தோண்டுதல், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள், கடும் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும்.
இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்திருந்தனர். எனினும் கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்து விட்டன.
தங்கள் மாநிலத்திற்கு உட்பட்ட சிறப்பு மண்டலத்துக்கான பகுதிகளின் பரப்பளவைக் குறைக்க வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளின் எல்லையோரங்களில் கணிசமான மக்கள் தொகை வசித்து வருவதை அம்மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேபோல் சுரங்கம், குவாரி தொழில்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் உள்ளூர் பொருளியல் பாதிக்கப்படும் என கர்நாடகா அரசு கவலை தெரிவித்துள்ளது.
உலகின் மிக முக்கியமான பல்லுயிர்கள் வாழும் எட்டாவது உணர்திறன் மண்டலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை அங்கீகரித்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு. அப்பகுதியில் உலக அளவில் அழிந்து வரும் நிலையில் உள்ள 325 வகையான தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள், மீன் இனங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களைத் தவிர்த்து முதற்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ள குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

