தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவான நீதி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்: பிரதமர் மோடி

2 mins read
மேற்கு வங்காளத்தில் 48,600 பாலியல் வழக்குகள் தேக்கம்
56929768-baf6-449d-90d6-d151b32f0cb0
பாலியல் வழக்குகளை விசாரிக்க 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை மேற்கு வங்க அரசு செயல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் இன்னும் தீர்க்கப்படாத பாலியல், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 48,600 என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பாலியல் வன்கொடுமை தண்டனைச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) கடிதம் எழுதி இருந்தார்.

மம்தாவுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கடிதம் எழுதியுள்ளார். அதன் பிரதியை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“மேற்கு வங்காளத்தில் பாலியல் வன்கொடுமை, போக்சோ தொடர்பான 48,600 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

“2024 ஜூன் 30 நிலவரப்படி, 81,000 பாலியல் வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

“மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை (போக்சோ) விசாரிக்கக்கூடிய 11 கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் முழுவீச்சில் இயங்கவில்லை.

“பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே வலுவான சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் நடப்பில் உள்ளன.

“அவற்றை ஏன் மம்தா பானர்ஜி தமது மாநிலத்தில் முழுவீச்சில் அமல்படுத்தவில்லை,” என்று அமைச்சர் அன்னபூர்ணா தேவி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கிடையே, இந்திய நீதித்துறையின் தேசிய மாநாட்டை சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி வழங்குவது பெண்களின் பாதுகாப்புக்கு அதிக உத்தரவாதம் அளிக்கும் என்றார்.

விரைவான நீதியை உறுதிசெய்ய குற்றவியல் நீதி அமைப்புகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தப்பட்ட பல்லாயிரம் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் பெண்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என மோடி பேசியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்