டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தில் பேரளவில் நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் பதிலளிக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) அம்மாநில உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
டேராடூனைச் சேர்ந்த சஞ்சய் ராவத் என்பவரும் வேறு சிலரும் அம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் கிட்டத்தட்ட ரூ.12 கோடி (S$1.774 மில்லியன்) அளவிற்கு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2024-25ஆம் ஆண்டு உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கம் மேற்கொண்ட சொந்தத் தணிக்கை அறிக்கையையே அதற்குச் சான்றாக அவர்கள் காட்டியுள்ளனர்.
தணிக்கை நடவடிக்கையை மேற்கொண்ட வெளிநிறுவனக் கணக்காய்வாளர், கேள்விக்குரிய செலவினங்களைத் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். விளையாட்டாளர்களுக்கு வாழைப்பழம் வாங்க ரூ.35 லட்சம் (S$51,745) செலவிட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளதும் அதில் அடங்கும்.
மாநில கிரிக்கெட் சங்கத் தணிக்கை அறிக்கையின்படி, நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு ரூ.6.4 கோடியும் போட்டித் தொடர்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.26.3 கோடியும் செலவிடப்பட்டன. முந்திய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.22.3 கோடியைவிட இது அதிகம்.
இதனையடுத்து, மாநில கிரிக்கெட் வீரர்களுக்குச் செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்ட வசதிகளைச் செய்யாமல், உணவு, வசதிகள் என்ற பெயரில் கிரிக்கெட் சங்கத்தினரே பல கோடி ரூபாயைச் சுருட்டிவிட்டனர் என்று மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அம்மனுக்களை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் திவாரி, பிசிசிஐ பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (செப்டம்பர் 12) ஒத்திவைத்தார்.

