புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட், ஆகாசா விமானங்களுக்கிடையே வியாழக்கிழமை (ஏப்ரல் 16) மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விமான நிலையத்தின் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியையும் சம்பந்தப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இரு விமானிகளையும் இந்திய சிவில் விமானத்துறை தலைமை இயக்குநரகம் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட விமானிகள், விபத்து நிகழ்ந்தபோது அந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஓடுபாதைகளில் விமானங்கள் செல்வதைக் கண்காணிக்கும் அதிகாரி (எஸ்எம்சி) ஒருவர் தவறு இழைத்ததற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தீர்மானிக்கப்பட்டதாக தகவல் தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர்.
“எல்லா விமான நிலையங்களிலும் எஸ்எம்சிக்கள் விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள். ஓடுபாதைகள், ஓடுபாதைகளுக்குள் நுழைவதற்காகவும் அவற்றிலிருந்து வெளியேறுவதற்காகவும் உள்ள பாதைகள் (டாக்சிவே), விமானங்கள் நிறுத்தப்படும் இடங்கள் ஆகியவற்றில் விமானங்கள் செல்வதைக் கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
விபத்து நிகழ்ந்தபோது சம்பந்தப்பட்ட எஸ்எம்சிதான் அந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் நகர அனுமதி வழங்கியிருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், நின்றுகொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தின்மீது வியாழக்கிழமை மோதியது. அச்சம்பவத்தில் இரு விமானங்களும் சேதமடைந்தன.

