இந்திய விமான நிறுவனமான ‘ஸ்பைஸ்ஜெட்’ தனது விமானப் படையை வலுப்படுத்தப் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த எட்டுப் புதிய விமானங்களைக் குத்தகைக்கு எடுக்கவுள்ளது.
புதிய விமானங்கள் மூலம், பண்டிகை மற்றும் குளிர்காலப் பயணிகளுக்குச் சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்று ‘ஸ்பைஸ்ஜெட்’ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தம் வழி, வரும் அக்டோபர் மாதத்திலிருந்து மேலும் 10 போயிங் விமானங்களுடன் சேர்த்து, ‘ஸ்பைஸ்ஜெட்; விமான நிறுவனத்தின் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 18ஆக உயரும்.
2025 குளிர்காலப் பயணங்களுக்கான விமானப் படையில் மேலும் 8 போயிங் 737 ரக விமானங்களைச் சேர்ப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி தேபோஜோ மஹர்ஷி தெரிவித்தார்.
“ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பயணத் திறனை மேம்படுத்தவும், தடையில்லாச் சேவைகளை வழங்கவும், பயணிகளுக்குச் சிறந்த பயண அனுபவத்தை அளிக்கவும் உதவும். மேலும், பண்டிகை மற்றும் குளிர்காலப் பயணங்களின்போது, முக்கிய வழித்தடங்களில் விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த விமானங்கள் உதவும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் பொதுவாகக் குளிர்காலப் பயணங்கள்தான் பரபரப்பான பயணக் காலமாக இருக்கும்.
போயிங் நிறுவனம், அதன் தயாரிப்புகளின் தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான கடுமையான சவால்களை அண்மையில் எதிர்கொண்டுள்ளது.
ஜனவரி 2024இல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் கதவு திறந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.