பெண் ஊழியரிடம் அத்துமீறியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்

பெண் ஊழியரிடம் அத்துமீறியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்

1 mins read
e39acd5e-cb6a-429c-be8f-51d8405dadd5
சம்பந்தப்பட்ட பயணி எழுத்துவழி மன்னிப்பு கேட்டுக்கொண்டபோதும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். படம்: ஊடகம் -

புதுடெல்லி: விமானத்தின் பெண் சிப்பந்திகளில் ஒருவரிடம் முறையின்றி நடந்துகொண்டதாகக் கூறி, ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் இருந்து பயணி ஒருவர் இறக்கிவிடப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று 23ஆம் தேதி திங்கட்கிழமை டெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்குப் புறப்படவிருந்த விமானத்தில் நிகழ்ந்தது.

இதன் தொடர்பில், விமானச் சிப்பந்திகளும் பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து அறிக்கை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஓர் அறிக்கை மூலமாக விளக்கமளித்துள்ளது.

"2023 ஜனவரி 23ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்குச் செல்லவிருந்த விமானத்தில் ஏறிய அந்தப் பயணி, முறையின்றி நடந்துகொண்டு, விமான ஊழியர்களுக்குத் தொந்தரவு கொடுத்தார். இதனையடுத்து, விமானத்தின் விமானிக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பயணியுடன் அவருடன் பயணம் செய்ய வந்தவரும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்," என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பயணி, பெண் சிப்பந்தியைத் தகாத இடத்தில் தொட்டார் என்பது சக விமானச் சிப்பந்திகளின் குற்றச்சாட்டு. ஆனால், குறுகலான இடம் என்பதால் அந்தப் பெண்மீது தற்செயலாக அப்பயணியின் கைபட்டுவிட்டதாக சக பயணிகள் கூறுகின்றனர்.

பின்னர் அந்தப் பயணி எழுத்துவழி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும், வேறு எதுவும் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்.

பின்னர் அப்பயணியைக் காவல்துறை கைதுசெய்துவிட்டதாக 'பிடிஐ' செய்தி தெரிவிக்கிறது.