புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள பழமைவாய்ந்த கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நாளில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “டெல்லியில் உள்ள ‘தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன்’ தேவாலயத்தில் காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்துகொண்டேன்.
“இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்,” என்று எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினர். இதையொட்டி, புதுடெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நாளான வியாழக்கிழமை, காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.
பேராயர் ரெவ் பால் ஸ்வரூப் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும், தொட்டிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் உருவச் சிலையையும் பிரதமர் மோடி தரிசித்தார். இந்த வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். தேவாலய வழிபாட்டில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் மோடி, பாதிரியார்களிடம் கலந்துரையாடினார்.
முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காணொளி மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். வாழ்க்கையை அன்பாலும் கருணையாலும் நிரப்பட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

