இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாவில் முதலிடம் வகிக்கும் ஆன்மீகப் பயணங்கள்

இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாவில் முதலிடம் வகிக்கும் ஆன்மீகப் பயணங்கள்

கோப்புப் படம்: ஏஎன்ஐ

02 Oct 2026 - 5:00 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு இரவு நேரப் பயணங்களில் ஆன்மீக, புனிதத் தலங்களுக்கான பயணங்களே முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அண்மைய சுற்றுலா செலவினக் கணக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025-26 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த உள்நாட்டு இரவுப் பயணங்களில் 48 விழுக்காடு புனிதப் பயணங்களாகவே அமைந்துள்ளன. நகர்ப்புற, கிராமப்புறங்கள் இரண்டிலும் ஆன்மீகப் பயணங்களே முதன்மைக் காரணியாக உள்ளன.

பயணங்களின் எண்ணிக்கையில் ஆன்மீகப் பயணங்கள் முன்னணியில் இருந்தாலும், செலவினத்தைப் பொறுத்தவரை மருத்துவப் பயணங்களே அதிக நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன.

ஒரு மருத்துவப் பயணத்திற்கான சராசரி செலவு ரூ.32,167 ஆகும் (கிராமப்புறங்களில் ரூ.29,454, நகர்ப்புறங்களில் ரூ.41,649). மருத்துவச் செலவுகள் மட்டுமே சராசரியாக ரூ.23,361 வரை ஆகிறது.

புனிதப் பயணங்களுக்கான சராசரி செலவு ரூ.7,694 மட்டுமே. பொழுதுபோக்கு சார்ந்த பயணங்களுக்குச் சராசரியாக ரூ.11,723 செலவிடப்படுகிறது.

கிராமப்புறப் பயணிகள் பெரும்பாலும் பேருந்துகளையும் (32 விழுக்காடு), நகர்ப்புறப் பயணிகள் ரயில்களையும் (35 விழுக்காடு) பயணத்திற்காக அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏறக்குறைய 80 விழுக்காட்டுப் பயணிகள் ஐந்து நாள்கள் அல்லது அதற்குக் குறைவான நாள்களிலேயே தங்களது பயணங்களை முடித்துக்கொள்கின்றனர்.

மாநில அளவிலான பயணப்பட்டியலில் 15.7 விழுக்காட்டுப் பங்களிப்புடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு 13.4 விழுக்காட்டுப் பங்களிப்புடன் இரண்டாம் இடத்திலும் ராஜஸ்தான் 8 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்