தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரைப் பணயம் வைத்த உளவுப் பெண்

4 mins read
b532e300-7e81-4088-8949-c41ea448054f
கல்வியைக் கைவிட்ட செஹ்மத், தன் தந்தைக்குப் பின் அவரின் விருப்பப்படி இந்தியாவுக்கான உளவுத்துறை பிரதிநிதியாக, ரகசியமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து துப்பறிய ஒப்புக்கொண்டார். - படம்: ஊடகம்
multi-img1 of 3

ஸ்ரீநகர்: காஷ்மீருக்குள் புகுந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்திய சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றதை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது இந்தியா.

இதனால் போர் பதற்றம் உண்டான சூழலில் 1971 இந்தியா, பாகிஸ்தான் போரின்போது இந்தியாவின் மாபெரும் வெற்றிக்குக் காரணமான ஒரு உளவாளிப் பெண் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அது குறித்து பார்ப்போம்.

அந்த இளம் பெண் நிகழ்த்திய சாகசங்களை நமது ரத்தம் உறைந்துபோகும், உயிர் சில்லிட்டுப்போகும் என்கிறார் எழுத்தாளர் ஹரிந்தர் சிக்கா.

இவரைப் பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் அந்த உளவுப் பெண்.

செஹ்மத்!

- இது அந்த இளம் பெண்ணின் உண்மைப் பெயர் அல்ல. டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காஷ்மீர் பெண்.

படிப்புடன் பாரம்பரிய நடனமும் வயலின் இசைக்கவும் கற்றுக்கொண்டிருந்த 20 வயது செஹ்மத்திற்கு என்னென்ன கனவுகள் இருந்ததோ!

1969ஆம் ஆண்டு அந்தப் பெண்ணின் தந்தை ஹிதாயத்கான் (உண்மைப் பெயர் அல்ல) தன் மகளை காஷ்மீருக்கு அழைத்தார். ஹிதாயத்கான் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ (RAW)வில் பணியாற்றியவர்.

1965 இந்திய, பாகிஸ்தான் போரின்போது இந்திய தூதராகச் செயல்பட்டார். தொழிலதிபர் போல் எல்லைத் தாண்டியும் போய் உளவு வேலை பார்த்தார்.

நோய்வாய்ப்பட்ட ஹிதாயத், மகள் செஹ்மத்தை வரவழைத்து, “நமது தேசத்திற்காக நீ பாகிஸ்தான் ரகசியங்களை, பாகிஸ்தானுக்குள் சென்று துப்பறிந்து நமது ராணுவத்திற்குச் சொல்ல வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.

அப்பாவின் தேசபக்தியை அந்தப் பெண்ணால் மீற முடியவில்லை. கல்வியைக் கைவிட்ட செஹ்மத், தந்தைக்குப் பின் அவரின் விருப்பப்படி இந்தியாவுக்கான உளவுத்துறை பிரதிநிதியாக, ரகசியமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து துப்பறிய ஒப்புக்கொண்டார்.

‘நாளை உயிரோடு இருப்போமா?’ என்கிற பதற்றத்துடன் ஒவ்வொரு நொடியையும் கடக்க வேண்டிய கடுமையான பணிதான் உளவாளி வேலை. அதை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதும், செஹ்மத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தியாவின் உளவுப் பிரிவான ‘ரா’ (RAW) தலைவர் மானவ் சௌத்ரி பயிற்சி அளித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்மட்ட விவாதங்கள் மற்றும் திட்டங்களை இந்திய ராணுவத்திற்கு தெரியப்படுத்துவதே செஹ்மத்தின் பணி.

பாகிஸ்தானியப் பெண்ணாக அங்கே ஊடுருவிய செஹ்மத், ராணுவத் தலைமையை குறிவைத்தார். பாகிஸ்தான் ராணுவ மூத்த அதிகாரியான பிரிகேடியர் பர்வேஸ் சையத்தின் மகனும் ராணுவ அதிகாரியுமான இக்பால் சையத்தை திருமணம் செய்துகொண்டார்.

இக்பாலின் குடும்பத்து ஆண்கள் அனைவருமே பாகிஸ்தான் ராணுவத்தில் பணியில் இருந்தார்கள். இப்படிப்பட்ட வீட்டில் மருமகளாக நுழைந்த செஹ்மத்தின் மனநிலை எத்தனை பதற்றமாக இருக்கும், ஆனால், மனத்துணிவுடன் செயல்பட்டார். ராணுவக் குடியிருப்பில் இருந்த அனைவருக்கும் பிடித்த பெண்ணாக மாறிப்போனார்.

செஹ்மத் கற்றிருந்த நடனம் மற்றும் இசைப்பயிற்சி அவருக்குப் பலமாக அமைந்தது. ராணுவப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி ஆசிரியை ஆனார்.

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி மக்கள் சுதந்திரம் வேண்டி, பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டி, அது தீவிரமடைந்த நிலையில், 1971ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான், ‘பங்ளாதேஷ்’ என்ற பெயரில் தனி நாடாக விரும்பியது.

அவர்களுக்கு உதவி செய்ய, பங்ளாதேஷ் உருவாக இந்தியா களமிறங்கியது. இதனால் 1971ல் இந்திய, பாகிஸ்தான் போர் மூண்டது.

அந்தச் சமயத்தில் பாகிஸ்தானின் பல்வேறு திட்டங்களை உளவு பார்த்து, இந்திய ராணுவத்திற்கு அனுப்பினார் செஹ்மத்.

இந்தப் போரில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பலமாக விளங்கியது ஐ.என்.எஸ்.விக்ராந்த் எனும் விமானம் தாங்கி கப்பல்.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பலைத் தகர்த்தால் இந்தியாவுக்குப் பேரிடி எனத் திட்டமிட்டது பாகிஸ்தான்.

ஏவுகணைகள் பொருத்தப்பட்ட பி.என்.எஸ்.ஹாஜி எனும் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் விக்ராந்த் கப்பலை அழிக்க எண்ணி, பாகிஸ்தான் நீர்மூழ்கியை அனுப்பியது.

இது சம்பந்தமான முழு விவரங்களையும் சேகரித்து இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பினார் செஹ்மத்.

இதனால் கடற்படை உஷாராகி, செஹ்மத் கொடுத்த தகவல் அடிப்படையில், பாகிஸ்தானின் ஹாஜி நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடித்தது இந்தியா.

இது இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கவும் பங்ளாதேஷ் உருவாகவும் காரணமாக அமைந்தது.

இதற்காக செஹ்மத் செய்த, உயிரைப் பணயம் வைத்த தீரச் செயல் அளப்பரியது.

தன்னைச் சந்தேகப்பட்டவர்களைக் கொலையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் செஹ்மத்திற்கு ஏற்பட்டது. ஆனால், இதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றினார் செஹ்மத் என்று சொன்னால் மிகையல்ல.

செஹ்மத்தின் வாழ்க்கையை, அவரை நேரில் சந்தித்து எழுத்தாளர் ஹரிந்தர் சிங் சிக்கா ஒரு நாவலாக எழுதினார். அந்த நாவலின் பெயர் ‘காலிங் செஹ்மத்’.

உளவாளியாகப் பணியாற்றியதால் செஹ்மத்தின் உண்மைப் பெயரை மறைத்துவிட்டது இந்திய ராணுவம். அதனால் ‘காலிங் செஹ்மத்’ என்ற பெயரை நாவலுக்குச் சூட்டினார் ஹரிந்தர் சிங்.

உறவினரையும் மைத்துனரையும் கொன்ற நிகழ்வுகள், பட்ட வலிகள் ஆகியவற்றால் மனக்குழப்பம் அடைந்த செஹ்மத், அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பினார்.

பஞ்சாப் மாநிலம், மலேர்கோட்லா நகரம் மத ஒற்றுமைக்கு மிகச் சிறந்த நகரம். பெரும்பான்மை இஸ்லாமியர்கள், ஓரளவு இந்துக்கள், சிறிதளவு சீக்கியர்கள் வாழும் இந்த நகரம், மத வெறுப்புக்கு இடம்தராத நகரம்.

செஹ்மத் இந்தியா திரும்பியதும், இங்குதான் வாழ்ந்தார். தன் மகனுக்கு தன் உளவு வேலை பற்றிய தகவல்களை அவர் சொல்லவில்லை.

‘காலிங் செஹ்மத்’ நாவலை மையமாக வைத்து, 2018ஆம் ஆண்டு ஆலியாபட் நடிப்பில் ‘ராஸ்ஸி’ (RAZZI) எனும் திரைப்படம் வெளியாகி, பார்த்தவர்களை அதிர வைத்தது.

செஹ்மத்...

“வெறும் பெயரல்ல, அது யுத்த வரலாறு...” என்கிறார்கள் இந்திய தேசப்பற்றாளர்கள்.

குறிப்புச் சொற்கள்