கொழும்பு: இலங்கையின் அழகிய கடற்கரைகள், வனவிலங்குப் பூங்காக்கள் மற்றும் பழமையான பௌத்த ஆலயங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்ததால் சுற்றுலாத் துறையின் வருமானம் செழித்தது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்த நிலையில் சூதாட்டக் கூடங்களை அமைத்து இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிகமானவர்களை ஈர்த்து வருமானம் ஈட்டும் அடுத்த கட்டத்திற்கு இலங்கையின் முதல் மார்க்சிஸ்ட் அதிபர் அனுர குமார திசாநாயக்க இறங்கியிருக்கிறார்.
இவர், பதவியேற்று செப்டம்பருடன் ஓராண்டு நிறைவடைகிறது.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டபொருளியல் சரிவுக்குப் பிறகு சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக அவர் சூளுரைத்தார்.
இதனால், சூதாட்ட உத்தியின் வெற்றி அதிபர் அனுர குமார திசாநாயக்கவிற்கு முக்கியமாகும்.
இலங்கையில் ஒரு சில சிறிய சூதாட்ட விடுதிகள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் திரு திசாநாயக்க கொழும்பில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.54 பில்லியன்) மதிப்புள்ள ‘சிட்டி ஆஃப் டிரீம்ஸ்’ சூதாட்ட வளாகத்தைத் திறந்து வைத்தார். இது, ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெக்காவைத் தளமாகக் கொண்ட மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சூதாட்ட வளாகத்தின் தொடக்க விழாவிற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தலைமை தாங்கினார். அவர் அங்கு நிரம்பியிருந்த கூட்டத்தின் முன்பு இந்திப் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
சூதாட்ட விடுதிகள் உட்பட சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை திரு திசாநாயக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். இது, தொழில்துறைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
2025ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 50 விழுக்காடு அதிகரித்து 3 மில்லியனாக உயர்த்துவது, 2024ஆம் ஆண்டில் இந்தத் துறையிலிருந்து கிடைத்த 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவது ஆகியவை இலங்கையின் நோக்கமாகும்.