தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழு மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

1 mins read
0ea66a69-3b20-419a-9011-770795337000
மீனவர்களை விடுவிக்கக்கோரி கடந்த வாரம் தங்கச்சிமடத்தில் பெரும் போராட்டம் நடைபெற்றது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. 

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். 

கடந்த 55 நாட்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேரை தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள், தங்களது குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அந்தத் திடீர் போராட்டத்தால் ராமேசுவரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்