இந்தியாவில் இலங்கை அதிபர்: தமிழக மீனவர்கள் பிரச்சினை பேசப்படலாம்

2 mins read
9b1a8865-fda3-430e-a8f1-d2d3445c7122
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்ற அனுர குமார திசாநாயக்க அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றாா்.

அதன் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அக்டோபரில் இலங்கை சென்றாா். அப்போது அவா் புதிய அதிபர் திசாநாயக்கவைச் சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தாா்.

அந்த அழைப்பை ஏற்று மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) சென்றுள்ளார்.

அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத், இணையமைச்சா் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோ ஆகியோரும் வருகை தந்துள்ளனர்

இந்திய அதிபர் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரைச் சந்திக்கும் திசாநாயக்க, டெல்லியில் நடைபெறும் வா்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளாா்.

பின்னர் பீகார் மாநிலத்துக்கு அவர் செல்வார்.

அதிபர் பதவி ஏற்ற பின்னர் திசாநாயக்க மேற்கொண்டு இருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

அதிபர் தேர்தலில் வென்ற கையோடு, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார் அவர்.

அதனைத் தொடர்ந்து, சென்ற மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தலைமை ஏற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

இதற்கிடையே, திசாநாயக்கவின் வருகை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயனளிக்கக்கூடிய பலதரப்பட்ட அம்சங்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) தெரிவித்து இருந்தது.

இருதரப்பிலும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கடல்துறை பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்