கொழும்பு: இலங்கை சுற்றுலாத்துறை மீண்டும் வேகமாக வளர்ச்சி கண்டு வருவது, அந்நாட்டு மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. அதற்கு இந்திய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணிதான் அந்நாட்டுப் பொருளியலின் ஆதாரமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளியல் திடீரென வீழ்ச்சி கண்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கடந்த ஓராண்டில் மட்டும் 16 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் (3.35 லட்சம்) இந்தியாவிலிருந்து சென்ற சுற்றுப்பயணிகள். பிரிட்டனிலிருந்து 1.54 லட்சம் பேரும் இந்த ஆண்டு இலங்கைக்குச் சென்றுள்ளனர்.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 37,494 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாத் துறையின் வேகமான வளர்ச்சியைத் தக்கவைக்கும் விதமாக, நடப்பாண்டில் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சந்தைப்படுத்துதல், விளம்பரங்கள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.