புவனேஸ்வர்: உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நிகழ்வின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஒடிசா காவல்துறை தெரிவித்தது.
அம்மாநிலத்தில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 27) தேரோட்டம் தொடங்கியது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 600 பக்தர்கள் காயமடைந்ததாக கலிங்கா தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
ஜூன் 27ஆம் தேதி தொடங்கிய கோவில் சிறப்பு நிகழ்வுகள், ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஜெகந்நாதர் கோவிலில் உள்ள மூன்று பிரம்மாண்ட தேர்களில் ஒன்றை பக்தர்கள் இழுக்கும் சடங்கு நடைபெறுகிறது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர்க்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. குறைந்தது எட்டுப்பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரில் சுமார் 10,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.