சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காப்பிக் கடை, உணவகத் தொடரான ஸ்டார்பக்ஸ், சென்னையில் உலகளாவிய திறன் நிலையத்தை (GCC) அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 800 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 21) தெரிவித்தது.
இருப்பினும் இதில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை அது வெளியிடவில்லை.
‘டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்’ நிறுவனத்துடனான கூட்டு முயற்சி மூலம் இந்தியாவில் கிட்டத்தட்ட 500 காப்பிக் கடைகளை நடத்திவரும் ஸ்டார்பக்ஸ், இது குறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த மருந்துத் தயாரிப்புத் தொடரான வால்கிரீன்ஸ், சென்னையில் திறன் மையத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே சிட்டி, பார்க்லேஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட உலகளாவிய பெருநிறுவனங்களின் தொழில்நுட்ப நிலையங்கள் இயங்கி வருகின்றன.
உலகளாவிய வர்த்தகக் குழுமங்கள், வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பு இல்லாத வகையில் நிறுவனத்திற்குள் செய்யப்படும் வர்த்தக ஆதரவு நடவடிக்கை சேவைப் பணிகளைத் தாண்டி, நிதி, மென்பொருள் மேம்பாடு, ஆராய்ச்சி போன்ற பணிகளுக்காகவும் இத்தகைய நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
