தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் ‘ஸ்டார்லிங்க்’ கருவி: எலான் மஸ்க் விளக்கம்

2 mins read
c9366da5-902e-4aaf-b5a1-68b01915bfc8
மணிப்பூர் மாநிலம் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. - படம்: பிடிஐ

இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அதிகாரிகள். ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) இணைய இயந்திரத்தைப்போல் தென்படும் கருவி ஒன்று, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில் அவை கண்டெடுக்கப்பட்டதாக இதுகுறித்து தகவல் தெரிந்தோர் கூறினர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ‘ஸ்டார்லிங்க்’ கருவி, எப்படி மணிப்பூருக்குள் வந்தது என்பதை அறிய சம்பந்தப்பட்ட அமைப்புகள் விசாரணை நடத்த முற்பட்டுள்ளன.

இந்தியாவில் செயல்படுவதற்கு ‘ஸ்டார்லிங்க்’ உரிமம் பெறவில்லை. அதோடு, அக்கருவி உண்மையிலேயே ‘ஸ்டார்லிங்க்’ கருவிதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ‘ஸ்டார்லிங்க்’ கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திரு மஸ்க் பதிலளித்தார்.

“ஸ்டார்லிங்க் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. திரு எலான் மஸ்க் இதை ஆராய்ந்து தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்டுவதைக் கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன்,” என்று இணையவாசி ஒருவர் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனரான திரு மஸ்க், இந்தியாவில் ‘ஸ்டார்லிங்க்’ துணைக்கோள் சமிக்ஞைகள் அணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

“இதில் உண்மையில்லை. இந்தியாவுக்கு மேல் உள்ள ‘ஸ்டார்லிங்’ துணைக்கோள் சமிக்ஞைகள் அணைக்கப்பட்டு இருக்கின்றன,” என்று அவர் பதிலளித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அம்மாநிலத்தில் அவ்வப்போது வன்முறை இடம்பெற்று வருகிறது.

வன்முறையால் மணிப்பூர் இரண்டு பிரிவுகளாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இரு பிரிவுகள், மெய்த்தி இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இம்பால் பள்ளத்தாக்கு, குக்கி இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மலைப் பகுதிகளாகும்.

இவ்வாரத் தொடக்கத்தில் மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டனர். மாண்டோரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.

காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட மூன்றாவது நபர், பயங்கரவாதிகளிடம் பணிபுரிந்தவர் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்