தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமலையில் அதிநவீன சமையல் கூடம்

2 mins read
638155f2-343a-4076-a1c2-57c4d4349434
சனிக்கிழமை அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்துவைத்தார். - படம்: இந்திய ஊடகம்

திருமலை: திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை காலை (அக்டோபர் 5) திறந்து வைத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வெள்ளிக் கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து ஆந்திர அரசு சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.

மேலும், சுவாமியை தரிசித்துவிட்டு, 2025ஆம் ஆண்டுக்கான தேவஸ்தான நாட்காட்டிகளை வெளியிட்டார்.

பின்னர் வெள்ளிக் கிழமை இரவு நடந்த பெரிய சேஷ வாகனச் சேவையிலும் அவர் கலந்து கொண்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

புரட்டாசி 3வது சனிக்கிழமை என்பதால் திருமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது,

சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் வாகனச் சேவையை கண்டு களித்தனர். இதில் 16 மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

இதற்கிடையே திருமலை பாஞ்ச சன்யம் விடுதி அருகே திருப்பதி தேவஸ்தானம் ரூ.13.45 கோடி செலவில் மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை கட்டியது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார் என்று இந்து தமிழ் திசை தகவல் வெளியிட்டிருந்தது.

இதில் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியமளா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்