அசாம் வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி: மாநில அமைச்சரவை ஒப்புதல்

அசாம் வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி: மாநில அமைச்சரவை ஒப்புதல்

2 mins read
2e3b70d3-36ea-4d69-a09e-dbe148e744bb
மாநிலம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 1,000 உயர்நிலைப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: மேப்பில்ஸ்
Google News Preferred Icon

கௌஹாத்தி: அசாம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மகளிர் நலன், சுகாதாரத் துறைகளை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் ரூ.50,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்ட வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி, பொது உள்கட்டமைப்பை நவீனமயமாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். இதில் ரூ.30,000 கோடி நபார்டு வங்கியின் நிதி உதவி மூலமாகவும் மீதமுள்ள ரூ.20,000 கோடி மாநில அரசின் சொந்த வருவாய் மூலமாகவும் திரட்டப்படவுள்ளது. இத்திட்டப்பணிகள் 2027ஆம் ஆண்டு தொடங்கி 2034ஆம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.

கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாநிலம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 1,000 உயர்நிலைப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்மார்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேண 6,000 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பெண்களுக்காக இரண்டு சிறப்பு மகளிர்ச் சந்தைகள், விளையாட்டு அரங்கம், நவீன திரையரங்குகள், கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளைக் கட்ட ரூ.1.50 லட்சம் உதவித்தொகை வழங்கும் திட்டமும் இதில் அடங்கும்.

புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்

இத்தொகுப்பின்கீழ், கௌஹாத்தி மருத்துவக் கல்லூரியில் ரூ.600 கோடி செலவில் அதிநவீன ‘புரோட்டான் பீம் தெரபி’ புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனையில் இத்தகைய உயர்தர சிகிச்சை மையம் அமைவது நாட்டிலேயே இது முதல்முறையாகும்.

ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் மேம்பட்ட சிகிச்சைக்கான அணுகலை விரிவுபடுத்தவும் அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் கரைகளை வலுப்படுத்த அரசு முன்மொழிந்துள்ளது. பருவமழைக் காலங்களில் அசாம் தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகள், சாலைகள், விவசாய நிலங்கள், பிற உள்கட்டமைப்புகளுக்குத் தொடர்ந்து சேதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் சமூக, பொருளியல் வளர்ச்சியை இந்த ஏழாண்டுத் திட்டங்கள் புதிய உயரத்திற்குக் கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்