சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை

2 mins read
9c9c737b-3bca-4327-bcda-c3ca3aa34c00
மூத்த எழுத்தாளர் பூமணி. - படம்: தினமணி

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் ‘அசுரன்’ திரைப்படக் கதாசிரியருமான மூத்த எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.

உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் இறுதிச்சடங்குகள் ஜூலை 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்றும் அவரது உறவினர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

பூமணியின் மறைவுக்கு பல்வேறு அரசியல், திரைப்பட, இலக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பூமணி உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமணி. 1947 மே 12ஆம் தேதி பிறந்த அவரது இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம்.

1966ஆம் ஆண்டு முதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த அவர், 1979 முதல் நாவல் எழுதத் தொடங்கினார். அவரது முதல் நாவல் ‘பிறகு’ என்ற தலைப்பில் வெளியானது.

தொடர்ந்து, ‘வெக்கை’, ‘நைவேத்யம்’, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’ ஆகிய நாவல்களை எழுதினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆறாவதாக, அஞ்ஞாடி நாவலை 2005ல் எழுதத் தொடங்கி, 2011ல் நிறைவு செய்தார். 1,100 பக்கங்களுடன் 2012 ஜனவரியில் வெளியிடப்பட்ட அந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. 2014ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

எழுத்தாளர் பூமணி ‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

மேலும், தனுஷ் நடித்து 2019ல் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அதன் கதாசிரியராக பூமணி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்