திருவனந்தபுரம்: மத்திய அரசு கேரளாவைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, இக்கருத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது என அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார்.
மத்திய அரசின் புதிய நிதிநிலை அறிக்கை கேரளத்துக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்றும் பினராயி விஜயன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கேரள அரசு நீண்டகாலமாக எய்ம்ஸ் மருத்துவமனை, அதிவேக ரயில் வழித்தடங்கள், விழிஞ்சம் துறைமுகத்துக்கான சிறப்பு நிதித்தொகுப்பு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாகவும் அவை அனைத்தும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள அரசுக்கான நிதி ஆணையத்தின் நிதி விடுவிப்பை அதிகரிக்கச் செய்யாததும், பழையபடி அதே 41% நிதி பங்களிப்பே நீடிக்கும் என்பதும் மத்திய அரசின் கொள்கைகளை கேள்விக்குறியாக்குவதாகக் குறிப்பிட்டுள்ள திரு பினராயி விஜயன், நிதிநிலை அறிக்கையில் கேரளா புறக்கணிப்பட்டதற்கான விளக்கத்தை அம்மாநிலத்தில் இருந்து மத்திய அரசில் அங்கம் விகிப்பவர்கள் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை பெருமுதலாளிகளை ஊக்குவிக்கும் வகையிலான பொருளியல் கோட்பாடுகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சாமானிய மக்களை தீவிர வறுமைக்குள் தள்ளிவிடும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கேரள முதல்வர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள புதிய பட்ஜெட்டில் கேரளம் முற்றிலும் விடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் சாடியுள்ளார்.
புதிய நிதிநிலை அறிக்கையில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் நேரத்திலும்கூட மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்துள்ளது என்றும் தமிழகத்துக்கு எனப் புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது எனத் திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

