புதுடெல்லி: கடந்த நான்கு நாள்களாக, டெல்லி-கோல்கத்தா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு சரக்கு வாகனங்கள் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
அந்த வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் பலரும் நான்கு நாள்களாக தேநீரும் பிஸ்கட்டுகளும் மட்டும் உட்கொண்டு நாள்களைக் கடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
கோல்கத்தா-டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 19, எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், லாரிகள் அந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன. நெரிசலைத் தவிர்க்க சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், கட்டுமானப் பணிகளே தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகிவிட்டது. இந்த நெடுஞ்சாலை செல்லும் வழியில் உள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏறக்குறைய 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் காத்திருக்கின்றன.
இந்தக் காத்திருப்பால் தங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.