புதுடெல்லி: இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான ஐந்து கிலோ எரிவாயு உருளையின் விலை, ஒரே நாளில் 261 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், உணவுகளின் விலை அதிகரித்துள்ளன. பொதுமக்கள் மத்தியிலும் கவலை நிலவுகிறது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவி வரும் மோதல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக கச்சா எண்ணெய்யின் விலை, அந்நியச் செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில், இந்தியாவில் எரிவாயுவின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் இந்த விலை, மாதந்தோறும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு உருளையின் விலை ரூ. 144 அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் ரூ. 203 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஒரேயடியாக ஒரு உருளைக்கு 993 ரூபாய் அதிகரித்து, ரூ. 3,239க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மே 1ஆம் தேதியன்று, ஐந்து கிலோ எடையுள்ள, வணிகப் பயன்பாட்டுக்கான சிறிய எரிவாயு உருளையின் விலையும் ஒரே நாளில் ரூ. 261 உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறுகிய கால, அவசரத் தேவைக்காக எரிவாயு உருளையைப் பயன்படுத்துவோருக்கு பெரும் சுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, எரிவாயு உருளை விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “விலைவாசி உயர்வு நாயகன் பிரதமர் மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது,” என நையாண்டி செய்துள்ளது.
மேலும், மோடி அரசுக்கு மக்களிடம் இருந்து பணத்தைப் பறிக்க மட்டுமே தெரியும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.

