புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போருக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கோலா அதிபர் ஜோவோ மானுவல் கோன்கால்வ்ஸ் லோரென்கோ, அதிகாரபூர்வ பயணமாக சனிக்கிழமை (மே 3) புதுடெல்லி சென்றுள்ளார்.
அவருக்கு இந்திய அதிபர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை மேற்கொண்டார் அங்கோலா அதிபர். பின்னர் பிரதமர் மோடியுடனும் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.
அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவும் அங்கோலாவும் உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
“இந்தியா, அங்கோலா ஆகிய இரு நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு அங்கோலா அளித்த ஆதரவிற்கு நன்றி.
“இந்தியாவிற்கும் அங்கோலாவிற்கும் இடையிலான உறவு நீண்ட காலமானது. இந்தியாவும் அங்கோலாவும் தங்கள் ராஜதந்திர கூட்டாண்மையின் 40வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன,” என்றார் பிரதமர் மோடி.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இருதரப்பு வர்த்தக மதிப்பானது, ஏறக்குறைய நூறு பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா உதவி உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 17 புதிய தூதரகங்களைத் திறந்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 700 மில்லியன் டாலர் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளில் தொழில் பயிற்சி மையங்களை இந்தியா திறந்துள்ளதாகவும், ஐந்து நாடுகளில் மின்னிலக்க உள்கட்டமைப்பை உருவாக்க உதவுவதாகவும் கூறினார்.

