மும்பை: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3ஆம் நாளாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை காலை 75,444.22 என்ற புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில் காலை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,470.50(1.93%) புள்ளிகள் குறைந்து 74,563.92 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 488.05 (2.06%) புள்ளிகள் குறைந்து 23,151.10 புள்ளிகளில் நிலை பெற்றது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை ஒரேநாளில் பங்குச் சந்தை வர்த்தகர்கள் 9.5 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த நான்கு ஆண்டுகளில் பங்குச்சந்தைகளுக்கு இதுவே மிக மோசமான வாரம் என்று கூறப்படுகிறது.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.62 விழுக்காடு, 2.52 விழுக்காடு சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி மெட்டல் 5 விழுக்காடு சரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
காலையில் நிஃப்டி எப்எம்சிஜி குறியீடு மட்டும் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் வர்த்தக முடிவில் அனைத்துத் துறைகளும் சரிவில் முடிந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் சரிந்தும் வர்த்தகமாகின.

