ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சரான திரு சந்திரபாபு நாயுடு மீது கல் வீசப்பட்டது.
திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
இத்தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பனபகா லட்சுமி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திரு சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டத்திலிருந்து அவர்மீது கற்களை வீசினர்.
ஆவேசம் அடைந்த திரு சந்திரபாபு நாயுடு தம் மீது கல் வீசியவர்கள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர் என குற்றம் சாட்டினார்.
தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து மோதிப்பார்க்க சவால் விடுத்தார்.
கற்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அங்கேயே சாலை மறியலிலும் ஈடுபட்டார்.
இதனை அடுத்து காவல்துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

