ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு

2 mins read
180ec3be-8c10-40bc-8622-50ff0a697dc5
இந்தியாவின் ஆர்எஸ்எஸ் வலதுசாரி அமைப்பின் தலைவர் மோகன் பகவத். - படம்: ராய்ட்டர்ஸ்

உத்தரப் பிரதேசம்: டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த விரைவு ரயில் ஒன்றில் ரயிலில், இந்தியாவின் ஆர்எஸ்எஸ் வலதுசாரி அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பயணம் செய்த பெட்டியின் மீது அடையாளம் தெரியாதவர்கள் சிலர் கல்வீசியதில் அதன் கண்ணாடி சேதமடைந்தது.

வியாழக்கிழமை (ஜூன் 11) இந்திய நேரப்படி இரவு 7.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மோகன் பகவத்திற்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ‘துண்ட்லா’ சந்திப்பில் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பின்னர், தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று அரசு ரயில்வே காவல் ஆய்வாளர் ஷேர் சிங் தெரிவித்தார்.

கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘ஸ்வர்ண் சதாப்தி’ விரைவு ரயில், வியாழக்கிழமை இரவு ஃபிரோசாபாத் மாவட்டத்தைக் கடந்து மக்கன்பூர் நிலையத்தில் நிற்காமல் கடந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

“கல்வீசப்பட்டுக் கண்ணாடி உடைந்த அதே பெட்டியில்தான் திரு மோகன் பகவத் இருந்தார். அவர் பெட்டியின் மறுபுறம் அமர்ந்திருந்ததால் பாதுகாப்பாக இருந்தார்; யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை,” என்று அரசு ரயில்வே காவல் ஆய்வாளர் ஷேர் சிங் குறிப்பிட்டார்.

கல்வீச்சில் ஈடுபட்ட நபரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் மாநிலக் காவல்துறையினர் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஃபிரோசாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா லாங்கே தெரிவித்தார்.

ஃபிரோசாபாத் பகுதியில் உள்ள இந்த ரயில் பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மீது கல் எறியப்படும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
ரயில்பயணம்தாக்குதல்காவல்துறை