உத்தரப் பிரதேசத்தை உலுக்கிய புயல், மழை; 89 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தை உலுக்கிய புயல், மழை; 89 பேர் உயிரிழப்பு

2 mins read
0e140ae0-c946-4545-960d-c6436de6f7fb
பிரயாக்ராஜில் காரின்மீது விழுந்த பெரிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைப் புதன்கிழமை (மே 13) மாலை வீசிய கடுமையான புயலாலும் பெருமழையாலும் 89 பேர் உயிரிழந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

பல மாவட்டங்களிலும் புயல், மழை காரணமாக மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்ததாகவும் வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் மின்சார விநியோகமும் தொலைத்தொடர்புச் சேவையும் தடைபட்டன. அதனையடுத்து, அதிகாரிகள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே கொட்டித் தீர்த்த மழையாலும் இடி மின்னலாலும் உயிரிழப்பு, உடைமை இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்துவ அறிக்கையின்படி, பிரயாக்ராஜில் 19 பேரும், பதோஹியில் 16 பேரும், ஃபதேப்பூரில் ஒன்பது பேரும் மாண்டுவிட்டனர்.

கான்பூர் தேகாத் மாவட்டத்தில் வேப்ப மரத்தின் அடியில் நின்றிருந்த 19 வயது இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. சோன்பத்ராவில் மரம் விழுந்து 38 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

புயல், மழை, ஆலங்கட்டி மழை, மின்னல் காரணமாக 53 பேர் காயமடைந்ததாகவும், 87 வீடுகள் சேதமடைந்ததாகவும், 114 கால்நடைகள் மாண்டுபோனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரங்களும் விளம்பரப் பதாகைகளும் விழுந்து கிடப்பதைத் தொலைக்காட்சியில் வெளியான காணொளிகள் காட்டின.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தேவையான உதவி கிடைப்பதை உறுதிசெய்யும்படி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, சேதங்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும்படி வருவாய், வேளாண்துறை அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இடிபாடுகளை அகற்றவும் மக்களுக்கு உதவவும் அவசரகாலக் குழுக்கள், காவல்துறையினர், உள்ளூர் ஆட்சியாளர்கள் ஆகியோர் கிராமப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்