சென்னை: காங்கிரஸ் மகளிரணியின் அகில இந்திய பொதுச்செயலர்களில் ஒருவராக தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அதே பொறுப்பில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நடிகை நக்மா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, நேரடி மோதல் காரணமாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக பொறுப்பு வகித்த விஜயதாரணியிடம் இருந்து திடீரென கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்புவையும் அவர் புறக்கணித்த தாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்துப் பேசினார் விஜயதாரணி. இதையடுத்து அவர் அதிமுகவில் இணைவார் என பரபரப்பு எழுந்தது. எனினும் அத்தகவலை மறுத்த விஜயதாரணி, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவி சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகி யோரைச் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் அவருக்கு தேசிய அளவிலான கட்சிப் பொறுப்பை அளித்துள்ளது காங்கிரஸ் தலைமை.
நடிகை நக்மாவுக்கு இணையாக விஜயதாரணிக்கும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளதும் இளங்கோவனின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் காங்கிரஸ் மேலிடம் செயல்பட்டுள்ளதும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இளங்கோவன், நக்மா தரப்பு களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விஜயதாரணி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. தன் மீது கட்சித் தலைமை வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உழைக்கப் போவதாக விஜயதாரணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

