தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தான் தனித்து போட்டியிடப்போவதாகவும் தன்னோடு கூட்டணி வைக்க ஒத்த கருத்துடைய யாரும் வரலாம் என்றும் தேமுதிக அறிவித்துவிட்டதை அடுத்து தேர்தலில் யாருக்கு வெற்றிமாலை என்பதை ஓரளவுக்குக் கணித்து விடக்கூடிய சூழல் அரும்பி இருக்கிறது. இப்போதைய சூழலில் அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக தலைமையில் ஓர் அணியும், மக்கள் நலக் கூட்டணி ஓர் அணியாகவும் பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தனியாகவும் போட்டி என்கிற நிலைமை ஏற்பட்டால், ஆறு முனைப் போட்டி அரங் கேறக் கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கணித்துச் சொல்கிறார்கள்.
"இப்படி ஒரு சூழல் என்றால் தேர்தலில் ஆளும் அதிமுக வென்றுவிடும் என்று தேர்தல் நடப்பதற்கு முன்னதாக இப் போதே தாரளமாகச் சொல்லலாம். "எல்லா கட்சிகளும் பிரிந்து தனித்து நிற்கின்றன. பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டன என்றெல்லாம் அரசியல் அரங்கில் பேச்சு அடிபடுகிறது. இருந்தாலும் இப்போதைக்கு இந்தச் சூழலை வெற்றிபெற வழி இல்லை," என்று அவர்கள் கூறுகிறார்கள். சென்னையில் மாவட்ட மகளிர் அணியின் சார்பில் நடந்த மகளிர் நாள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய விஜயகாந்த், தான் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

