இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக உள்ளது இந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல். இம்முறை பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, தேமுதிக= மக்கள் நலக் கூட் டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆகியவை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் களம் இறங்குகின்றன. மேலும் விடியல் கூட்டணி, எஸ்டிபிஐ, அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியுடன் பல சமுதாய அமைப்புகளும் களம் இறங்குகின்றன. சுயேச்சை வேட்பாளர்களும் அதிகம் இருப்பார்கள். எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தவேளையில், கட்சிகளுக்குள்ளேயே அதிருப்தி அதிகரித் திருப்பது கட்சிகளுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் பல்வேறு இடங்களில் அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். திமுக வேட்பாளர் பட்டியல் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. மறுநாளே பல தொகுதிகளில் வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம் நடந்தது. அணைக்கட்டுத் தொகுதியில் வேட்பாளர் மீது தாக்குதல் நடந்தது. பல தொகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
அதிமுகவில் 36 தொகுதி வேட்பாளர்களுக்கு பொது மக்கள், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கட்சித் தலைமைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி யான பின், ஆறு முறை திருத்தம் செய்யப்பட்டு, 13 பேர் மாற்றப்பட்டனர். மேலும் பலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்களை ஓரிடத்திற்கு அழைத்து வந்து அரசு சாதனைகளை பட்டியலிடும் ஜெயலலிதாவின் பிரசாரம் மக்களைக் கவராததும் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரை காண வரும் மக்கள் உச்சி வெயிலில் பரிதவிக்க அவர் 'ஏசி' இயந்திரங்கள் சூழ அமர்ந்து எழுதி வைத்திருப்பதை படிப்பது மக்களிடம் எடு படவில்லை. அவரது பிரசார பொதுக்கூட்டம் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் அதிமுகவினர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனர். தேமுதிக உட்பட மற்றக் கட்சி களிலும் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் 22ஆம் தேதி முதல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் துவங்குகிறது. 29ஆம் தேதி கடைசி நாள். அதிமுக, திமுக, வேட்பாளர்கள், சுபமுகூர்த்த நாளான 25ஆம் தேதி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியும் மற்ற வேட்பாளர்களும் ஏப்ரல் 25ல் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோல், அதிமுக வேட்பாளர்களும் அன்றைய தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

