என்ன படித்துள்ளார் மோடி? கல்வி விவரத்தை கெஜ்ரிவாலுக்கு வழங்க உத்தரவு

என்ன படித்துள்ளார் மோடி? கல்வி விவரத்தை கெஜ்ரிவாலுக்கு வழங்க உத்தரவு

2 mins read
de7329c8-7709-49c5-ab27-ad8a2d7ce0d4
Google News Preferred Icon

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வழங்கும்படி டெல்லி, குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் 1983-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் கல்வித் தகுதி குறித்து புகார்கள் எழுந்துள்ளதால், அவரது கல்வித் தகுதி குறித்த விவரங்களை வெளியிடக் கோரி மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவுக்கு கெஜ்ரிவால் வியாழனன்று கடிதம் எழுதினார். அதில், பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவல் களை வெளியிட மறுப்பதாக மத்திய தகவல் ஆணையத்தின் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார். நாட்டின் பிரதமரின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை மறைப்பதற்கான அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

மோடிக்கு எந்த கல்வித் தகுதியும் இல்லை என்ற குற்றச் சாட்டுகள் உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள உரிமை உள் ளது. எனவே தகவல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு இந்த தகவலை வெளியிட வேண்டும் என கெஜ்ரிவால் தனது கடிதத் தில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலின் கடிதத்தையே ஒரு மனுவாகக் கருதி, அவர் கோரியுள்ள விவரங்களை அளிக்கும்படி டெல்லி பல்கலைக்கழகத்துக்கும் குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார். மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் எண்ணையும் ஆண்டையும் மேற்கண்ட பல்கலைக் கழகங்களுக்கு பிரதமர் அலுவலகம் வழங்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.