வாரணாசி: புகை மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் கங்கையில் இயக்கப்படும் அனைத்து படகுகளையும் இ-படகுகளாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். கங்கையில் தற்போது டீசலால் இயங்கும் இயந்திரம் பொருத்திய படகுகள் பயன்படுத்தப் படுகின்றன. அதிக டீசல் புகை காரணமாக கங்கையில் மாசு ஏற்படுகிறது. அதனால், அங்கு சூரிய சக்தியால் இயங்கும் இ=படகுகளை போக்குவரத்துக்கு தொடங்கி வைத்தார். மாதந்தோறும் மோடி தமது தொகுதியான வாரணாசிக்குச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அவ்வகையில் அவர் இந்த வருடத்தில் மூன்றாவது முறை யாக நேற்று வாரணாசி சென்றார். டெல்லியில் இருந்து தனி சிறப்பு விமானத்தில் பபத்பூர் விமான நிலையத்துக்கு வந்த மோடி பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்லியா எனும் பகுதிக்குச் சென்றார்.
அங்கு மோடி நாடெங்கும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடெங்கும் 5 கோடி ஏழைகள் பலன் பெறுவார்கள். பல்லியா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வாரணாசி திரும்பி வந்தார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு சூரிய சக்தியால் இயங்கும் இ-ரிக்ஷாக்களை ஆயிரம் பேருக்கு வழங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி சம்னேகாட் பகுதியில் உள்ள 'ஜனபிரவாகா' எனும் கலாச்சார மையத்துக்கு சென்றார். அந்த மையத்தை சுற்றிப் பார்த்தார். இறுதியாக பிரதமர் மோடி கங்கை நதிக்கரையில் உள்ள அஸ்சிகாட் பகுதிக்கு சென்றார்.

