தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நீதிபதி ஒருவரே மதுபோதையில் ஒழுக்கக் குறைவாக நடந்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் விஸ்வநாத் (படம்) என்ற அந்த நீதிபதி காரைக்கால் நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அவர் ரயிலில் கோவை சென்ற போது பயணச்சீட்டு பரிசோதகர் அவரிடம் அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, பரிசோதகரை நோக்கி தகாத சொற்களைப் பயன்படுத்தினாராம் நீதிபதி சுரேஷ். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்த பயணச்சீட்டு பரிசோதகர்கள், அந்த ரயில் திருச்சியை வந்தடைந்ததும் நீதிபதி சுரேஷுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. பிறகு நீதிபதி சுரேஷ் வேறு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டார்.

