சென்னை: சென்னை அயனா வரத்தில் காவல்துறை வாகனம் மோதி இரண்டு மாணவர்கள் பலியான சம்பவத்தில் அந்த வாகனத்தை ஓட்டிய காவலர் ஏழுமலை பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட ஏழுமலை என்ற அந்த ஓட்டுநர், எழும்பூர் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டார். பிறகு காவலர் ஏழுமலை பிணையில் வெளியே வந்தார். பெரம்பூர் ஏகாந்திபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் ராம் குமாரும் அவரது நண்பர் சாலமனும் அயனாவரம் அருகே உள்ள பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ஞாயிற்றுக் கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது காவலர் ஓட்டி வந்த வாகனம் மோதியது.
இதில் ராம்குமார், சாலமன் ஆகியோர் நிலைத் தடுமாறி விழுந் தனர். ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த சாலமன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, காவல்துறை வாகனத்தை இயக்கிய ஏழுமலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டார். இதற்கிடையே மாணவர் இறந்த தால் மறியலில் ஈடுபட்ட உறவினர், நண்பர்கள் மீது தடியடி நடத்தப் பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.
சென்னை அயனாவரத்தில் காவல்துறை வேன் மோதியதில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காவல் துறை மீது நடவடிக்கை கோரி அந்தப் பகுதியிலே உள்ள பொது மக்கள் சாலை மறியல் நடத்திய போது, அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதில் 2 மூதாட்டிகள் உட்பட ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2014 ஆம் ஆண்டு 15,190 பேர் மரணமடைந்தனர் என்ற புள்ளி விவரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.

