நாடாளுமன்ற துணை சபாநாயகரை காணவில்லை: சுவரொட்டி பரபரப்பு

நாடாளுமன்ற துணை சபாநாயகரை காணவில்லை: சுவரொட்டி பரபரப்பு

1 mins read

கரூர்: நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையைக் காணவில்லை எனும் வாசகங்களுடன் வீடு வீடாக வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் காரணமாக கரூர் நகராட்சிப் பகுதியில் பரபரப்பு நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது கரூரில் தம்பிதுரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரை ஊருக்குள் நுழையவிடாமல் பல பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தம்பிதுரையைக் கடுமையாக விமர்சித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், "ஊர், பெயர் தெரியாத உங்களுக்காக வாக்களிக்கவில்லை. அதிமுக, முதல்வர் ஜெயலலிதாவின் வேட்பாளர் என்பதால் ஆதரித்தோம். காலையில் எழுந்தவுடன், அரசு அதிகாரிகளை தூங்க விடாமல், மக்களின் குறைகளைக் கேட்பதாக நடித்தீர்களே; இப்போது, எங்கே போனது உங்கள் நடிப்பு?" என்று காட்டத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தம்பிதுரைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், கரூர் அதிமுகவினர் மத்தியில் கலக்கம் காணப்படுகிறது.