சென்னை: பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆட்சியில் இருப்போரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவதும் எதிர்க்கட்சிகளைக் கண்காணிப்பதும் மட்டுமே தங்களுடைய பணி என காவல்துறை நினைக்கக்கூடாது என விமர்சித்துள்ளார். "காவல்துறை இவ்வாறு செயல்படாமல் இருந்தமைக்காக என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க தமிழக அரசு தவறிவிட்டதாகச் சாடியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

