இந்திய பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

இந்திய பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

1 mins read

புதுடெல்லி: டாக்காவில் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய பெண்ணின் உடல் நேற்று புதுடெல்லியில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல உணவகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 19 வயது இந்திய இளம் பெண் உட்பட 20 பிணைக் கைதிகள் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில் இந்தியப் பெண்ணின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருந்தார். டாக்காவில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்ற பிறகு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தரு‌ஷி ஜெயின் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிரிழந்தார்.

தரு‌ஷியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. தரு‌ஷியின் தந்தை சுமார் 20 ஆண்டுகளாக பங்ளாதேஷ் நாட்டில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். விடுமுறைக்காக பங்ளாதேஷ் வந்த தரு‌ஷி தீவிரவாதிகளின் தாக்குதலில் மாண்டார்.