விஜயகாந்த்: செம்மரக் கடத்தலில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு

விஜயகாந்த்: செம்மரக் கடத்தலில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு

1 mins read

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் அதிமுக பிரமுகருக்குத் தொடர்புள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். அனைத்துலக செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பார்த்திபனுக்கு தொடர்புள்ளதை ஆந்திர மாநில காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். "பார்த்திபனை ஆந்திர போலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக இதனைக் கண்டுகொள்ளவில்லை.

"நாட்டுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் காவல்துறை செயல்படுவது மக்கள் மத்தியில் பெருத்த கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "மக்களுக்கு பலனளிக்க கூடிய வகையில் செயல்பட வேண்டிய ஆளுங்கட்சியினர், ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் துணைகொண்டு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான செயல்களில் ஈடுபடுவது, ஆளும் அரசுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று விஜயகாந்த் மேலும் கூறியுள்ளார்.2016-07-10 06:00:00 +0800