வேலூர்: புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி, நண்பரிடமே 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பூசாரி வேலூரில் கைதாகி உள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்தவர் 55 வயதான முருகதாஸ். காளி கோவில் பூசாரியான இவர் அண்மையில் தனது நண்பரும் பெட்டிக்கடை உரிமையாளருமான ஏழுமலை (65 வயது) என்பவரைச் சந்தித்து, தன் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் ஆர்வமடைந்த ஏழு மலை புதையல் குறித்து மேலும் விசாரிக்க, ஒரு பூதம் அப்புதை யலைக் காப்பதாகவும் அதை விரட்டியடிக்க வேண்டுமெனில் பூசை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் முருகதாஸ்.
தம்மிடம் போதிய பணம் இல்லாததால், பூசை செய்ய முடிய வில்லை என இவர் கூறியதை நம்பிய ஏழுமலை, பூசை செலவை தாம் ஏற்பதாகக் கூற, புதையலை சரி பாதியாகப் பிரித்துக் கொள்வது என முடிவாகியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்டங்களில் 50 ஆயிரம், ஒரு லட்சம் என முருகதாசிடம் ஏறத் தாழ 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார் எழுமலை. இதற் காக அவர் வீடு, நிலத்தையும் விற்றுள்ளார்.
தன் பங்கிற்கு முருகதாஸ் சில பூசைகளைச் செய்தாரே தவிர, புதையல் கிடைத்த பாடில்லை. இதனால் சலிப்படைந்த ஏழுமலை, புதையல் குறித்து மீண்டும் விசாரித்தபோது, மேலும் 10 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளார் முருகதாஸ். சந்தேகம் அடைந்த ஏழுமலை, காவல்துறையை அணுக, திருவ னந்தபுரம் தப்பிச் செல்லவிருந்த முருகதாஸ் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணையில், வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, மேலும் பலரிடம் அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

