சென்னை: வாட்ஸ்அப் குழு உள்ளிட்ட இணையக் குழுக்கள் மூலம் போதைப் பொருள் விற்கும் கும்பல் பற்றி காவல்துறைக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போலிசார் வலைவீசியுள்ளனர். வாட்ஸ்அப் குழுவில் தங்களுக்கு நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களை மட்டும் இணைத்துக்கொள்கிறார்கள் போதைப்பொருள் விற்பனையாளர்கள். குழுவில் உள்ளவர்களுக்கு கஞ்சா தேவைப்படும்போது தகவல் கொடுத்தால் போதும், வீடு தேடிச் சென்று கேட்ட பொருளை ஒப்படைக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் சென்னையில் இதுவரை 6 ஆயிரம் கிலோ கஞ்சா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை மருந்து கடத்துவோர் கார், வேன், பேருந்து, ரயில் எனப் பல வழிகளில் அவற்றைக் கடத்துகின்றனர்.
கடந்த 27ஆம் தேதி செங்குன்றத்தில் 200 கிலோ கஞ்சா சிக்கியது. ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அது தொடர்பாகவும் போலிசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகமும் காவல்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

