சசிகலா புஷ்பாவை கைது செய்யக் கோரி அதிமுக புகார் மனு

சசிகலா புஷ்பாவை கைது செய்யக் கோரி அதிமுக புகார் மனு

2 mins read

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்யக் கோரி திருச்சி காவல்துறை ஆணையர் அலுவல கத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பாண்டியன் சார்பில் அளிக்கப் பட்டுள்ள அம்மனுவில், முதல்வர் ஜெயலலிதாவின் மாண்பைக் குலைக்கும் வகையில் சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிய தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தன்னை முதல்வர் தாக்கி யதாக நாடாளுமன்றத்தில் போய் பேசியிருக்கிறார் சசிகலா. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் தன் வீட்டுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்திருக்கலாம்.

"ஆனால் அதைச் செய்யாமல், நாடாளுமன்றத்தில் தமிழக முதல் வர் குறித்துத் திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார். முதல்வர் தன்னைத் தாக்கியதாகவும், பதவி விலக வலியுறுத்தியதாகவும் அவர் வாய் மொழியாக மட்டுமே சொல்கிறார். இதற்கு அவரிடம் சாட்சியங்கள் இல்லை," என்று செய்தியாளர்க ளிடம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் இல்லாமல் முதல்வர் மீது குற்றம்சாட்டிய சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், 20 நாட் களுக்குள் தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக கூறினார்.

இதற்கிடையே, பொய்ப் புகாரின் அடிப்படையில் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், தங்களுக்கு முன்பிணை அளிக்கக் கோரியும் சசிகலா புஷ்பாவின் கணவரும் மகனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவின் உறவினர்கள் இருவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது சரியாக களப் பணியாற்றவில்லை எனக் கூறப் படுகிறது. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.