சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வரும் 25ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரியில் இருந்து தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதால் தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
"அடுத்து சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சினைகளிலும் இதே சூழல் நிலவுகிறது. எனவே தமிழக உரிமையை நிலைநாட்ட, அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். அதற்கான முயற்சியை நாங்கள் முன்னெடுத்தோம்," என்றார் பாண்டியன். 25ஆம் தேதி போராட்டத்திற்கு வணிகர்களின் ஆதரவைக் கோர இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியினர் 19ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித் திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

