சென்னை: வீரதீர சாகச செயலுக் காக தமிழக அரசு வழங்கும் 'கல்பனா சாவ்லா விருது' இம்முறை நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் மின் மயானப் பூங்காவின் மேலாளர் ஆவார். மின் மயானத்தை அழகுற பராமரித்ததுடன் ஒரு கட்டத்தில் மயானத்தில் சடலங் களை எரிக்கும் பணியை மேற் கொண்டுள்ளார். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவர், தனது தந்தை இறந்தபோது இறுதிச் சடங்கு செய்ய, உறவினர்கள் வராமல் சிரமப்பட்டதாகவும் குடும்பச் சூழலால் வேலை தேடியபோது மின் மயானத்தில் பூங்காவை பராமரிக்கும் வேலை கிடைத்தது என்றும் கூறுகிறார்.
"அந்த மின் மயானத்தை, தனியார் தொண்டு நிறுவனம், பராமரித்து வருகிறது. அதில் சேர்ந்து, பூங்காவை பராமரிக்கத் துவங்கினேன். மயானத்தில், உடலை எரிக்கும் ஊழியர்கள், அப்பணியை சுத்தமாகச் செய்யாததால் நானே அந்தப் பணியைச் செய்கிறேன் எனக் கேட்டுப் பெற்றேன். குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நான் அதை கண்டு கொள்ளாது துணிச்சலுடன் செயல்பட்டேன். இதுவரை 2,500க்கு மேற்பட்ட உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளேன். இறந்தோர் தெய்வத்திற்கு சமம்," என்று சொல்லும் ஜெயந்திக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். கணவர் பயண நிறுவனம் நடத்துகிறார். முதல்வர் ஜெயலலிதா தன்னை பாராட்டியதாக ஜெயந்தி கூறியுள்ளார்.

