ரூ.700 கோடி பணத்துடன் வந்த மூன்று கொள்கலன் லாரிகள் நிறுத்திவைப்பு

ரூ.700 கோடி பணத்துடன் வந்த மூன்று கொள்கலன் லாரிகள் நிறுத்திவைப்பு

1 mins read
01347a51-ec7e-4bcb-94fc-cbbbb972ab64
-

சென்னை: சுமார் 700 கோடி ரூபாய் ரொக்கப் பணத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மூன்று கொள்கலன் லாரிகளை காவல்துறையினர் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். கோவையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அப்பணம் கொண்டு வரப்பட்டது என்றும், விழுப்புரத்தை கொள்கலன் லாரிகள் நெருங்கிய போது இரவாகிவிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை நிறுத்தப்பட்டன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலின்போது திருப்பூர் மாவட்டத்தில் கொள்கலன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி ரொக்கப் பணம் சிக்கியது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ போலிசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அதேபோன்று கொள்கலன் லாரிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இம்முறை லாரிகளில் உள்ள பணம் கோயம்புத்தூரில் உள்ள 5 தனியார் வங்கிக் கிளைகளுக்குச் சொந்தமானவை என்றும், பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே அவ்வங்கிகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆயுதப்படை போலிசாரின் பாதுகாப்புடன் பயணம் மேற்கொண்ட மூன்று லாரிகளும் நேற்று முன்தினம் விழுப்புரம் வந்தபோது இரவாகிவிட்டது. எனவே பாதுகாப்பு கருதி 3 லாரிகளையும் விழுப்புரம் ஆயுதப்படை திடலுக்கு போலிசார் கொண்டு சென்றனர். அங்கு போலிசார் குவிக்கப்பட்டு, லாரிகளுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. இப்பணம் குறித்து இதுவரையில் சர்ச்சைகள் ஏதும் வெடிக்கவில்லை.