திருவள்ளூர்: அடுத்த மாதம் 5ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி. இதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பிள்ளையார் சிலை விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 'சாட்பவுடர்' மூலம் விநாயகர் சிலைகளைச் செய்து வருகின்றனர். சுமார் மூன்று அடி உயரம் முதல் பத்து அடி உயரம் வரை இங்கு சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.
இதில் பாம்பு விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இவை ரூ. 3,000 முதல் ரூ. 20,000 வரை விற்கப்படுகிறது. இந்தச் சிலைகளில் வண்ணக் கலவைகளும் ரசாயனக் கலவைகளும் இல்லாமல் எளிதில் நீரில் கரையக் கூடிய சுற்றுச் சூழலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தாத பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது சிறப்பு.

