சென்னை: பண மோசடிப் புகாரின் பேரில் கைதான எஸ்ஆர்எம் குழும நிறுவனர் பச்சமுத்து 15 நாள் நீதிமன்றக் காவலின் பேரில் சிறை யில் அடைக்கப்பட்டார். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவர் வழக்குப் பதிவாகி உள்ளது. மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி மொத்தம் 111 பேரிடம் ரூ.72 கோடி வரை மோசடி செய்ததாக பச்சமுத்து மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை என உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில், சென்னை போலிசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதை யடுத்து தமக்கு நெஞ்சு வலிப்ப தாகக் கூறினார் பச்சமுத்து. இதனால் போலிசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு 12 மணியளவில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தம்மிடம் ரூ.1 கோடி பெற்றுக்கொண்டு பச்ச முத்து ஏமாற்றியதாக பிரபல நிதி நிறுவனர் போத்ரா புகார் எழுப்பியுள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது தமக்கு பச்சமுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக பச்சமுத்துவுக்கு பிணை மறுக்கப்பட்ட தகவல் தெரியவந்ததும், அவரது ஆதர வாளர்கள் நீதிமன்றத்தின் முன்பு கூடினர். பச்சமுத்துவுக்குப் பிணை வழங்கக் கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பச்ச முத்து ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிலைகுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களைக் கைது செய்தனர். இத னிடையே ஆத்தூர் புறவழிச் சாலையில் 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது குறித்துப் போலிசார் விசா ரித்து வருகின்றனர்.

