சட்டமன்றத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் பிரசாரத்தின்போது அதிமுக அர்த்தமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்ததாகத் தேர்தல் ஆணையம் இப்போது கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக அறிக்கையில் விதிகளை மீறி பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்தது. அதனையடுத்து தேர்தல் ஆணையம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை விளக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அது பற்றி அக்கட்சி, ஆணையத் திற்குச் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச கைத்தொலைபேசி, ஏழை மக்களுக்கு அம்மா வங்கி அட்டை போன்ற அறிவிப்புகளை எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்பதை அதிமுக செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா விளக்கவில்லை என்பதைத் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறும் செயல் எனக் கண்டித்த தேர்தல் ஆணையம், இது குறித்த தேர்தல் ஆணையத்தின் கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில் திருப்திகரமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளது. எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்று தெரியாமல் அளித்த அர்த்தமற்ற வாக்குறுதிகளுக்காக அதிமுகவைக் கண்டிப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

